Friday, July 3, 2009
கவிதைகள்1
உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ?
எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள முடியும்
உன்
மெல்லிய முத்தத்தைத் தவிர.
உயிரும் உயிரும்
மேலேறி
கூடு விட்டுக் கூடுபாயும்
மந்திரம் கற்குமிடம்
நம்
உதடுகள் சந்திக்குமிடமா ?
நீ
மழலைத் தெருவில்
முத்தம் விதைத்து நடக்கிறாய்
என்னைக் கண்டதும்
கருமியாகிறாய்.
வல்லினம் மட்டுமே
யுத்தத்துக்குப் பயன்படுமென்று
உன்
முத்தத்துக்கு முன்பு வரை
ஒத்துக் கொண்டிருந்தேன்
நான்.
ஒத்தடம்
காயம் தருமென்பதை
உன்
உதடுகள் தானடி
உறுதிப் படுத்தின
முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.
உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என்
பருகுதலை
பின்வாங்க மறுக்கிறேன்.
என்
தன்னம்பிக்கை முனையில்
தற்கொலை செய்கின்றன
தயக்கங்கள்
முத்தப் போருக்கு
நீ
தயாரா ?
எனக்கு
புறமுதுகு பழக்கமில்லை.
உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா
நீ
என் உதடுகளில்
போர்த்திச் சென்ற முத்த ஆடை
என்
உள்ளத்துக் குளிரை
அள்ளிக் குடித்து,
வெப்பம் ஊற்றிப் போகிறது.
கண்களில் மட்டும்,
இன்னும் விலகவில்லை
துருவத்துக் குளிரின்
பருவத் துள்ளல்.
உனக்கான முத்தங்களை
என்
படுக்கைத் தலையணையில்
தவறாமல் இட்டு வைக்கிறேன்.
என்றேனும்
மறக்காமல் வந்து
பெற்றுப் போ,
தலையணையை.
உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment