1.
மெளனங்கள்
இறுகிக் கிடக்கும் பாறை போல
சுமையானவை.
உன்
கரம் கோர்த்த
மெளனத்தைத் தவிர
2.
எப்போதும்
உன்னுடன் இருப்பேன்
என்று
சொன்ன நினைவு மட்டும்
இப்போதும்
என்னுடன் இருக்கிறது
0
3.
உன்னுடைய
முத்தங்களின் ஒன்றைத்
திருட முடிந்தால்
என்
தனிமைகளின் உதடுகளுக்கு
தத்துக் கொடுத்திருப்பேன்.
0
4.
வயலில் இட்ட விதை நெல் போல
நடப்பட்டிருக்கிறது
உன் புன்னகை
என் இதய வயலில்.
உன் பார்வை ஈரத்தைப்
பரிமாறினால்
முளைத்து வளரும்
நீ அறியாத ஒரு கணத்தில்
0
5.
நீ
என்னுடன் இருந்தால்
என் வாழ்க்கை
ஆனந்தமாகும்.
என் வாழ்க்கை
ஆனந்தமாய் இருந்தால்
நீ
என்னுடன் இருக்கிறாய் என்று அர்த்தம்.
0
6
நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்
0
7.
இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்களின்
கையில் என்கிறார்கள்
இளைஞர்களின் எதிர்காலம்
உன் கையில்
என்பதை அறியாதவர்கள்.
0
8
உனது
மனக் கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்க முனைகையில்,
நீ
கரையில் ஒதுங்கி
எனக்காய் காத்திருந்தாய்
காதல்
புரிந்தது எனக்கு.
0
9
காதலிக்கும் இதயம்
நிலவுடன் கதை பேசும்.
காதலிக்கப்படும் இதயம்
நட்சத்திரங்களுடன் நாட்டியமாடும்.
எப்படியோ
காதலில் இருப்பவர்கள்
நிலத்தை நிராகரித்து
வானத்தில் மட்டுமே வலம் வருகிறார்கள்
0
10.
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
பரவசப் படியேறுகையில்
உணர்ந்தேன்
ஒவ்வோர் காதலுக்குள்ளும்
ஒவ்வோர்
பிரபஞ்சம் படுத்திருப்பதை
0
அங்கிங்கெனாதபடி
எங்கும்
உன் நினைவுகளின் உருவம்
புன்னகைத்தபோது
உளவியலார் சொன்னார்கள்
கடவுளுக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
உருவமில்லை என்று
Friday, July 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment